தென்காசி, சூன் 26-
செங்கோட்டை புளியரையில் போராட்டம் நடத்திய இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தியதாக, புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரான்சிஸ் அந்தோணி சிகிச்சை பெற்றபோது, அவருடைய இளைய மகள் அபிதா (22), தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசு மருத்துவ மனை எதிரே உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறியும், அரசு மருத்துவ மனையின் மேல்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஏறியும் தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு மஜீத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து போலீசார் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, அபிதா தனது வீட்டின் மேற்கூரையில் ஏறி மீண்டும் போராட்டம் நடத்தினார். அவருைடய அக்காள் பெர்னா ஜூலியா வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதற்கிடையே, அபிதாவின் தொடர் போராட்டத்தால் தங்களது ஊருக்கு அவப்பெயர் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் போலீசார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து நள்ளிரவில் அபிதா போராட்டத்தை கைவிட்டு, வீட்டின் மேற்கூரையில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றதாகவும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அபிதா மீது செங்கோட்டை மற்றும் புளியரை காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நிருபர் நெல்லை டுடே