தென்காசி, ஜூன் 1 -தமிழக அரசை அவதூறாக விமர்சித்து கவர்னரிடம் மனு அளித்த பா.ஜ.மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக சார்பில் கவர்னருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து  தென்காசி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்லப்பிள்ளையார்குளம் எஸ்.கே.மயிலவன் தமிழக கவர்னர் மற்றும் காவல்துறை  தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர்  ராஜகோபாலன்  மீது பாலியல் அத்துமீறல் புகாரை நேர்மையாக விசாரித்து வரும் தமிழக அரசு குறித்தும், இவ்வழக்கில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகம் உள்ள நிலையில் அவர்களின் சிலரை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜ.கவை சேர்ந்த மாநிலங்கவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக கவர்னரிடம் மனு கொடுத்திருப்பதாக பத்திரிக்கை செய்தி மூலம் தெரிய வருகிறது. 
அம்மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை ஹிட்லர் அரசோடு ஒப்பிட்டு, அவதூறு இழைத்ததுடன், பிராமணர்களை காப்பற்றுவது போல ஒரு போலியான பிம்பத்தை ஏற்படுத்தி, தவறு செய்ததாக கருதப்படும் தனியார் பள்ளி நிறுவனத்தினரை  மறைமுகமாக காப்பாற்றுவதுடன், வெளிப்படையான விசாரணையை தடுக்கும் நோக்கத்தோடு கொடுக்கப்பட்ட மனுவாகவே தெரிகிறது.
சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்களை காப்பாற்றும் உள்நோக்கத்துடனும், அரசின் மீது அவதூறான கருத்துக்களை தெரிவித்து, மிரட்டல் விடுத்து விசாரணையை சீர்குலைக்கும் வகையில் மாநிலங்கவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி என்பவர் தங்களுக்கு அனுப்பிய மனு உள்ளதால், அவரை அந்த மனுவினை உடனடியாக எழுத்து பூர்வமாக திரும்ப பெறுவதற்கு அறிவுறுத்தியும், காவல் துறை விசாரணை மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணையத்தின் விசாரணை மற்றும் தமிழக அரசினை மிரட்டும் வகையில் செயல்படும் அவர் மீது தகுந்த சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவும், 
சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அவரை மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு மாநிலங்களவை சபாநாயகர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே