தென்காசி, ஜூன் 1-
சிவகிரியில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மைய த்தை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், ஸ்டெல்லா மேரிஸ் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு சித்த மருத்துவம் மற்றும் கோமியோபதி துறை சார்பில் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவிக்கையில்:-
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம், ஸ்டெல்லா மேரிஸ் கல்வியியல் கல்லூரியில் இன்று முதல் சித்த மருத்துவ கோவிட் 19-சிறப்பு சிகிச்சை மையம் 75 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்து வழிமுறைகளின் படி தொடங்கப்பட்டுள்ளது.
இம் முகாமில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை முறைகளான உள் மருந்துகள் வெளிப்புற சிகிச்சைகள் சிறப்பு சித்த யோக முச்சுப்பயிற்சிகள், தியானம், பிராணவாயு அளவை அதிகரிக்கும் பிரத்யேகமான நுரையிரலை பலப்படுத்தும் ஆசனங்கள், வர்ம முறைகள் மன உளைச்சலை போக்கும் முறைகள், கவுன்சிலிங் மற்றும் கபசுர குடிநீர் நிலவேம்பு குடிநீர், நொச்சிக்குடிநீர், ஒமக்குடிநீர், பிராணவாயு அதிமுள்ள பொருட்களான கிராம்பு, இலங்கப்பட்டை, மஞ்சள் சிரகம், இஞ்சி கலந்த முலிகைதேநீர், அயிங்காயம் கலந்த நீர், நீராவிப்பிடித்தல், ஒமப்பொட்டணம், மஞ்சள் திரி நுகர்தல் போன்ற சிறப்பு சிகிச்சைகள், முலிகை சார்ந்த உணவுகள் வழங்கப்படும்.
மேலும், நோய்த்தொற்றிலிருந்து குணமாகி நலமுடன் விட்டிற்குச் செல்பவர்களுக்கு உடல் வலிமைக்காக தமிழக அரசின் ஆரோக்கிய பெட்டகமான சித்த மருந்துகள் ஒரு மாத காலத்திற்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்டி.சதன் திருமலைக்குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.நெடுமாறன், துணை இயக்கநர் (சுகாதாரப்பணிகள்) மரு.யோகானந்த், மாவட்ட சித்தா அலுவலர் மரு.உஷா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (சித்தா) மரு.கலா, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் முருகசெல்வி, சித்தா மருத்துவர்கள் ஹரிகரன், சதிஷ், சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.