தென்காசி, சூன் ,  14-
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் துவங்கியுள்ளது. ஊரடங்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சோகம் அடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்தக் காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்து கொண்டு இருக்கும். இதனால் குற்றாலத்தில் அனைத்து  அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.குற்றாலத்தில் இந்த குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கவும்,  அருவிகளில் ஆனந்தமாக குளிக்கவும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து குவிந்த வண்ணம் இருப்பார்கள்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் வழக்கம் போல் இந்த ஆண்டும் ஜுன் மாதம் துவங்கியதும் வெயிலின் தாக்கம் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசத் துவங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக  குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வருகிறது. இதனால் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளிலும் குளிர்ந்த காற்றுடன் சீசன் கால மெல்லிய சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி, கரடி அருவி, குண்டர் தோப்பு அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் துவங்கியது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுந்த நிலையிலும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மற்றும்  குற்றாலம் பகுதியில் சீசன்காலத்தை நம்பி வாழும் வியாபாரப் பெருமக்கள் குற்றாலம் அருவிகளில் விழும் தண்ணீரை பெரும் சோகத்துடன்  பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது . 
ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஆண்டு முழுவதும் சீசன் காலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வர அனுமதிக்கவில்லை.அதனைத் தொடர்பு ஐய்யப்ப சீசன் காலத்திலும் குளிக்க அனுமதிக்கப் படவில்லை. 
இதனால் குற்றாலம் சீசன் கால வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

 இந்நிலையில் இந்த ஆண்டு சீசன் துவங்கியுள்ளது அனைத்து அருவிகளிலும்  தண்ணீர் விழத்துவங்கியுள்ள நிலையில் இப்போதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ள நிலையிலும் மகிழ்ச்சி அடைய முடியாமல் சோகத்தில் தவித்து வருகிறார்கள்.

எனவே தமிழக அரசு குற்றாலம் பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் சீசன் கால வியாபாரிகள் குத்தகைதாரர்கள் மற்றும் பொதுமக்களின்  நலன்கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இந்த ஆண்டு சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்லவும், அருவிகளில் குளிக்கவும் உரிய விதிமுறைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிருபர் நெல்லை டுடே