குற்றாலத்தில் குரங்குகளுக்கு
காவல்துறை சார்பில் உணவு
தென்காசி எஸ்.பி.,சுகுணாசிங் நடவடிக்கை
தென்காசி, ஜூன் 1-
குற்றாலத்தில் பசியால் வாடிய குரங்குகளுக்கு ஊரடங்கு முடியும் வரை காவல்துறை சார்வில் உணவு வழங்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் கூறினார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை துவங்கும் ஜூன் மாதம் சீசன் துவங்கி செப்டம்பர்மாதம் நிறைவுபெறும். இதன் பின்னர் ஐயப்பசீசன் துவங்கி விடும். இக்காலகட்டத்தில் குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதியில் உலாவரும் குரங்குகளுக்கு உணவு அளிப்பர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும்பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றாலத்தில் உள்ள குரங்குகள் பசியால் வாடி வருகின்றன. சில சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது குரங்குகளுக்கு உணவு அளித்து வருகின்றனர்.இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் குற்றாலத்தில் உள்ள குரங்குகளுக்கு உணவு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டார். அவர் காவல்துறையினருடன் குற்றாலத்திற்கு சென்று மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் பசியால் துடித்துக்கொண்டிருந்த குரங்குகளுக்கு பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். குரங்குகள் ஆர்வத்தோடு வந்து பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை எடுதது சாப்பிட்டன.
இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் கூறும்போது, ஊரடங்கு முடியும் வரை குற்றாலத்தில் உள்ள குரங்குகளுக்கு காவல்துறை சார்பில் உணவு அளிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள விலங்குகளுக்கு உணவு அளித்து உதவுங்கள் என்றார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் இப்பணியை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்

.நிருபர் நெல்லை டுடே