தென்காசி,  சூன் 9-

ஆலங்குளத்தில் புதிதாக அரசு மகளிர் கல்லூரி கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி தென்காசி மாவட்டம் தொடக்க விழாவில் பங்கேற்ற அப்போதய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆலங்குளத்தில் ரூ.9.13 கோடியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார்.

தொடர்ந்து கல்லூரி கடந்த ஆண்டு முதல் தற்காலிகமாக ஆலங்குளம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு சொந்தமாக கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் ஆலங்குளம் மலைக் கோவில் அருகே கழுநீர்குளம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 16 ஏக்கர் அரசு நிலம் இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மகளிர் கல்லூரி கட்டுவதற்கு உகந்த இடமாக இது உள்ளது. வரும் பேரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக பேசி அனுமதி பெறுவேன் என்றார்.

தொடர்ந்து அவர் ஆலங்குளம் பஸ்நிலையம் அருகில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார். முன்னதாக வீராணம் காசிக்குவைத்தான்- காவலாகுறிச்சி உபரிநீர் கால்வாய் திட்டத்தையும் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் ஆலங்குளம்
தாசில்தார் பட்டமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி, அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சண்முக சுந்தரராஜ், அ.தி.மு.க. நகர செயலர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் ராதா, கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே